ஆண்டுக்கணக்கில் பராமரிப்பே இல்லை ஆளைக் கொல்லும் சாலைப் பள்ளங்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

0
1096

சிவகங்கை நகரில் பல்வேறு சாலைகளில் நடுவில் காணப்படும் பெரிய அளவிலான பள்ளங்களால் தொடர் விபத்துகள் நடந்து உயிர்ப்பலியை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. சிவகங்கை நகரில் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளாக மஜீத் ரோடு, போஸ் ரோடு, காந்தி வீதி, நேரு பஜார், திருப்பத்தூர் சாலை, ரயில்வே கிராசிங் சாலை உள்ளிட்டவை உள்ளன. இந்தச் சாலைகள்தான் நகரின் முக்கியமான பகுதிகளை இணைக்கக் கூடியவைகளாகும். இதில் மஜீத் ரோடு பல ஆண்டுகளாகப் பராமரிப்பில்லாத நிலையில் கனரக வாகனப் போக்குவரத்தால் பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இருந்து மஜீத்ரோடு வரும் அஜீஸ் சாலை, மஜீத் ரோட்டிலிருந்து வாரச்சந்தை இணைப்புச் சாலை, ஓவர்சீயர் தெருவில் உள்ள கான்கிரீட் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆவரங்காடு பகுதி சாலைகளே இல்லாமல் காட்சியளிக்கிறது. பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் பாண்டிகோயில் மெயின் தெருவில் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையையொட்டி கழிவுநீர் செல்லும் சுமார் 8 அடி உயரப் பள்ளம் உள்ளதால் தொடர் விபத்து நடந்து வருகிறது.

இதுபோல் பல்வேறு சாலைகளின் சந்திப்புகளில் நீர் செல்வதற்காக கீழ்ப்பகுதியில் போடப்பட்டுள்ள குழாய்கள் (சிறிய பாலம்) உடைந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றைச் சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளதால் மேலும், மேலும் குழாய்கள் உடைந்து சாலைகள் குறுகி–்ப்போயுள்ளன.  இந்தப் பள்ளங்களில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் சாலைகளின் நடுவே உள்ள குழிகள் தெரியாத நிலையில் உள்ளதால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “நகரில் உள்ள பிரதானச் சாலைகள்கூட பராமரிப்பில்லாமல் உள்ளன. சாலைகளின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்துகள் நடந்து வரும் நிலையிலும் அவற்றைச் சரி செய்வதில் மெத்தனம் காட்டப்படுகிறது. மழைக்காலங்களில் இந்தப் பள்ளங்களில் ஆட்கள் நடந்து சென்று உள்ளே விழுந்தால்கூட தெரியாது. மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் ஆண்டுக்கணக்கில் சாலைகள் பராமரிப்பின்றி கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. உடனடியாக இவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here