- தான் இயக்கும் ஆட்டோவில் தண்ணீர் கேன் பொருத்தி குடிநீர் தேடுவோரின் தாகம் தீர்க்கும் பணியைச் செய்து வருகிறார் இளையான்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது யாசின். பரமக்குடியில் வசித்து வரும் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். அந்த ஆட்டோவினை இவரே இயக்கி வருகிறார். இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து நாள்தோறும் ரயில் மூலம் வந்து செல்கின்றனர். ஆனால், இளையான்குடிக்கு ரயில்பயண வசதி இல்லாததால் பரமக்குடி ரயில் நிலையத்தில் இறங்கும் அவர்கள் கார், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக இளையான்குடிக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு இளையான்குடியிலிருந்து வெளியூர் செல்பவர்களையும், வெளியூர்களிலிருந்து இளையான்குடிக்கு வருபவர்களையும் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு சென்று அழைத்து வருவதை கடந்த 5 ஆண்டுகளாக முகம்மது யாசின் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், இளையான்குடிக்கு வந்து செல்லும் பயணிகளிடம் நன்கு பழக்கமாகி உள்ளார். இதனால் இளையான்குடியிலிருந்து ரயிலுக்குச் செல்லவோ அல்லது பரமக்குடி ரயில் நிலையத்திலிருந்து இளையான்குடிக்கு வரவோ எண்ணும் சிலர் முகம்மது யாசினை போன் மூலம் தொடர்பு கொண்டு ஆட்டோவை அழைக்கின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் இவரது ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவரின் குழந்தை கடும் வெயிலினால் தாகம் ஏற்பட்டு தண்ணீர் கேட்டு அழுதுள்ளது. ஆட்டோ செல்லும் வழியில் கடைகள் இல்லாத பகுதியாக இருந்ததால் உடனடியாக அவருக்குத் தண்ணீர் வாங்கி கொடுக்க இயலவில்லை. இதனால் இளையான்குடி வரும்வரை தாகத்துடன் பயணித்துள்ளது அந்தக் குழந்தை. இதன் பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய முகம்மது யாசின் தாகத்தால் தவித்துப் போன அந்தக் குழந்தையின் நிலையினை தனது மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.
இதனைக் கேட்ட அவரது மனைவி மரியம் ஆயிசா, இது போன்ற வெயில் காலங்களில் தண்ணீர் தாகத்தினை தீர்க்கும் வகையில் நமது ஆட்டோவிலேயே தண்ணீர் வசதி செய்ய ஏற்பாடு செய்யலாமே என யோசனை கூறியுள்ளார். இதனைக் கேட்ட யாசினும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தனது ஆட்டோவிலேயே குடிநீர் கேன் ஒன்றை வைக்கும் வகையில் வடிவமைத்து நாள் தோறும் குடிநீரை இலவசமாக விநியோகித்து வருகிறார். தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் மட்டுமல்லாது, தனது ஆட்டோ செல்லும் இடங்களில் எல்லாம் குடிநீர் கேட்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்கி தாகம் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அடாவடியானவர்கள் எனப் பேச்சு உள்ள நிலையில் இவர்களைப் போன்ற சமூகப் பொறுப்பு கொண்டவர்களும் இருப்பது அந்தப் பேச்சை மாற்ற உறுதுணையாக இருக்கும் என்றால் மிகையாகாது.
நன்றி: விகடன்