சிவகங்கையின் முக்கியமான வர்த்தக அங்காடிகளைக் கொண்டிருக்கும் நேரு பஜார் மற்றும் காந்தி வீதி அந்த வட்டாரத்தில் மிகப் பிரபலமானவை. சுதந்திரத்துக்காகப் போராடிய வேலுநாச்சியாரின் கோட்டையைச் சுற்றியே காந்தி வீதி மற்றும் நேரு பஜார் அமைந்துள்ளன.சுதந்திரத்திற்குப் பிறகு வாணிபம் செய்துவந்த வாணியங்குடிதான் இன்றைக்கு நேரு பஜாராக மாறி நிற்கிறது. இந்த அங்காடித் தெருயில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை நுகர்பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. வீட்டு உபயோகப் பாத்திரங்கள், மெடிக்கல், ஜவுளி நிறுவனங்கள், மொபைல் ஷோரூம்கள் போன்றவை பரபரப்பாக இயங்கி வருகின்றன. சுற்றுப்புறக் கிராம மக்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் இந்த இரண்டு வீதியில் வாங்கிச் செல்கிறார்கள்.காந்தி வீதியில் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கான சீருடைகள் முதல் திருமணத்துக்கான பட்டுப் புடவைகள், சினிமா பாணியிலான அலங்காரப் பொருள்கள், ஆண் களுக்கான பிராண்டட் சட்டைகள், பேன்ட்கள் என அனைத்து வகையான உடைகளும் இங்கு கிடைக்கின்றன.ஹோட்டல்கள், பாத்திரக் கடைகள், நகைக்கடைகள் என பிஸியாக இயங்கி வருகின்றன. சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் காந்தி வீதிக்குள் பல ஆண்டு களாகப் புழங்கியவர்கள் என்ப தால், அவர்கள் இப்போதும் தங்களுக்குத் தேவையான பொருள்களை இந்த வீதியிலிருந்து தான் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.
“நேரு பஜார் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குபிறகு உருவான பஜார். சிவகங்கையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களில் அப்போதைய பிரதான தொழில் நெல், கரும்பு, மிளகாய், மல்லி விவசாயம் மட்டுமே. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையும் மிளகாய், மல்லி, கருப்பட்டி, வெல்லம் போன்றவை அனைத்தும் இந்த வீதியில் ஒவ்வொரு கடை வாசலிலும் குவிந்து கிடக்கும். முதல் நாள் இரவே காளையார்கோவில், தேவ கோட்டை, சூராணம், இளையான் குடி, சாலைக்கிராமம், திருப்புவனம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்பத்தூர், மேலூர், காரைக்குடி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் இந்தப் பொருள் களோடு வந்துசேர்ந்துவிடுவார்கள். புதன்கிழமை அதிகாலையில் சந்தை கூடும். வியாபாரிகள் ஒவ்வொரு பொருளுக்கும் விலை வைத்து மொத்தமாக வாங்கி லாரிகளில் ஏற்றிக்கொண்டு போவார்கள்.
எனக்கு விவரம் தெரிந்து மிளகாய், வெல்லம், மல்லி இங்கிருந்துதான் தென்மாவட்டங் களுக்கு சப்ளையானது. ஒவ்வொரு கடைகளிலும் புதன்கிழமையன்று மட்டும் பத்தாயிரம் கிலோ வெல்லம், மல்லி, மிளகாய் விற்பனை செய்யப்பட்டன. அப்படி களைகட்டிய மார்க்கெட் தற்போது மவுசு கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது. அரிசி, மளிகைப்பொருள்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கலாம். சுமார் 100-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொரு மளிகைக் கடைக்கும் பாரம்பர்யமான பெயர் இருக்கிறது. கிராமங்களில் இருந்துவரும் மக்கள் வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்கள், அரிசி, காய்கறிகளை வாங்கும்போது, குழந்தைகளுக்குத் தேவையான மிக்சர், முறுக்கு, அல்வா போன்றைவற்றை அரை நூற்றாண்டைக் கடந்த ‘லாலா’ மிக்சர் கடையில்தான் வாங்கிச் செல்கிறார்கள். 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தும் பெண்கள் கூட்டம் கூட்டமாக வேன் பிடித்து நேரு பஜாருக்கு படை யெடுக்கும் சம்பவம் இன்னும் உண்டு. அதற்குக் காரணம், இங்கேதான் மிளகாய், மல்லி மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்தப் பொருள்கள் இங்கு மலிவாகக் கிடைப்பதற்குக் காரணம், இங்கு அதிகமான லாபம் வைத்து வியாபாரிகள் விற்பதில்லை. கிலோவுக்கு ஒரு ரூபாய்தான் வைக்கிறோம். ஆகையால், பொதுமக்கள் நேரு பஜார் தவிர, வேறு எங்கும் மளிகைப் பொருள்களை வாங்க விரும்புவதில்லை.சிவகங்கையின் இதயத்துடிப்பு என்றாலே இந்த இரண்டு வீதிகள்தான்.தற்போது மக்கள் தொகைப் பெருக்கம், நகர விரிவாக்கம் போன்ற காரணங் களால் பஸ் ஸ்டாண்ட், சிவகங்கை அரண்மனை காம்ப்ளக்ஸ் சுற்றிலும் வணிகக் கடைகள் அதிகரித்துவிட்டன. ஆனாலும், பழைமையான ஜவுளிக் கடைகள் காந்தி வீதியில் இருப்பதால், இன்னும் காந்தி வீதிமீது உள்ள ஈர்ப்பு மக்களுக்குக் குறையவில்லை.எங்களைப் போன்ற சிறிய அளவிலான மளிகைக்கடைக்காரர் களுக்கு ஜி.எஸ்.டி தேவையில்லாதது. நாங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஏற்கெனவே வரி கட்டித்தான் வாங்கு கிறோம். மறுபடியும் நாங்க நுகர்வோர் கிட்ட ஜி.எஸ்.டி வரி வாங்கணும் சொல்றது எப்படிச் சரியாகும்? சின்ன வியாபாரிகளுக்கு இந்த முறை சரிப்பட்டு வராது. நாடு பூராவும் ஒரே வரின்னு சொல்லிட்டு, கடைசில அந்த வரியை பொருளை வாங்குறவங்க தலையில சுமத்துறது எப்படி சரியாயிருக்கும்’’ என்று கேட்கிறார் பல ஆண்டுகளாக இங்கு கடை நடத்திவரும் ராமச்சந்திரன்.இதே வீதியில் லாலா மிட்டாய் கடை வைத்திருக்கும் பெரியவர் ராஜாராமிடம் பேசினோம்.“நான் நேரு பஜாரில் கடை தொடங்கி 45 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது இருந்த பஜார் இன்றைக்கு இல்லை. அப்ப ஜவுளிக் கடை, கமிஷன் கடை, பலசரக்கு கடைங்க மட்டுமே இருந்துச்சு. மக்கள் கூட்டம் எப்பவுமே இருக்கும். பனை வெல்லம் இங்கே ரொம்ப ஃபேமஸ். மலைமாதிரி குவியலாகக் குவிந்து கிடக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் கரையாது. அந்த அளவிற்குத் தரம் இருந்தது. மிளகாய், மல்லி, வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதிய காலம் மாறினாலும் இன்னும் தரத்திற்காகவும், நம்பிக்கைக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க’’ என்றார்.பெரிய மாநகரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் பட்டையைக் கிளப்பினாலும், சிவகங்கை போன்ற ஊர் களிலும் நேரு பஜார் போன்ற பாரம்பர்யமான கடைத் தெருக்கள் இன்னும் வியாபாரத்தில் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
நன்றி: விகடன்